Article by By K. Manoharan (எஸ்.வி. ராஜதுரை)
(Introduction to an Article in Tamil on Anuradha by Manoharan –
It was first published in a Tamil monthly in April 2012 and was included in the collection of my articles published by Vidiyal by the late 2012. In fact the first two parts deal with the way the International Women’s Day was celebrated in a vulgar way by a people ranging from the Hindutva Right to a section of the followers of Periyar. The latter were more interested in praising the present Chairman of the Dravidar Kazhagam -K.Veeramani, than remembering a number of outstanding feminist thinkers produced by Periyar’s Self Respect Movement and the extraordinary original thinking of Periyar himself on the womens’ question. Then my article goes on to tell the history of the International Women’s Day.
Anu comes in the second and third part of my article. The second part begins with Mao’s article ‘Recruit Large Number of Intellectuals’ and briefly talks about the conditions prevailing in China then. The article describes the current neo-liberal situation, the consensus between the imperialist powers, the new technologies developed to seek out and destroy what the ruling the ruling classes perceive as anti nationals, and the Indian situation riddled with caste question, the role of the media, its connection with the ruling classes etc., and then begins giving a biographical sketch of Anu and the history of her political and social struggles, her deep understanding of the caste and women questions and finally her tragic death.)
கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் ‘அனைத்துலகப் பெண்கள் நாள்’ (International Women’s Day), தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. வழக்கம் போலவே அரசு-சாரா அமைப்புகள் பல பேரணிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தின; எந்தக் கட்சியையும் சாராத சுயாதீ¢னமான பெண்கள் அமைப்புகள் சில, பெண்கள் பிரச்சனைகளைப் பற்றிய ஆழமான கருத்தரங்குகள் ஒன்றிரண்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.விதிவிலக்காக இடதுசாரி இயக்கங்கள் பெரும்பாலானவற்றைத் தவிர,தமிழகத்தில் அரசியல்,பண்பாட்டு இயக்கங்களிலும் ஊடகங்களிலும் ஆணாதிக்க தந்தைமைச் (patriarchal) சொல்லாடல்கள் நிரம்பி வழிவதை, பெண் விடுதலைக்கான நீடித்து நிற்கும் சிந்தனைப் பங்களிப்புச் செய்த பெரியாரின் கருத்துகள் தேசியவாதச் சொல்லாடல்களாலும் போலி பகுத்தறிவுவாத சொற் சிலம்புகளால் அடக்கப்பட்டுவிட்டதை அங்கதத்துடனும் சோகத்துடனும் எடுத்துக் கூறும் ‘ஆண்மையோ ஆண்மை’ என்னும் நாடகம் சென்னை ‘மரப்பாச்சி’ நாடகக் குழுவினரால் சென்னையிலும் மதுரையிலும் நிழ்த்தப்பட்டது. இந்த நாடகம் முன்வைக்கும் விமர்சனங்களை செரிக்க முடியாதவர்கள் ,”இந்தப் பெண்கள் ரொம்ப ஓவராகப் பேசுகிறார்கள்” என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெண் விடுதலை குறித்த பெரியாரின் சிந்தனை, செயலபாட்டுப் பங்களிப்புகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதுபோல அமைந்திருந்தது கி.வீரமணி குழுவினரால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில இணையதள ஏடான Countercurrentsக்கு எழுதப்பட்ட கட்டுரை. கி.வீரமணி, பதினோரு வயதிலேயே திராவிடர் கழக மேடையேறிப் பேசியவர், சி.என். அண்ணாதுரையால் ‘திராவிடர் இயக்கத்தின் ஞானசம்பந்தர்’ என்று புகழப்பட்டவர் என்பன போன்ற ‘அரிய வரலாற்றுச் செய்திக்ளை’ உள்ளடக்கியிருந்த அந்தக் கட்டுரையில் பெண் விடுதலைக்காக பெரியார் கூறிய கருத்துகள், மேற்கொண்ட செயல்பாடுகள் ஆகியன பற்றி ஒரு வரி கூட இல்லை(பார்க்க: Periyar’s Movement, Countercurrent.org,28 June 2003).
‘தினமலர்’ போன்ற அச்சு ஊடகங்கள், ‘’சன் தொலைக்காட்சி’ போன்ற மின்னூடகங்கள் ஆகியனவும் பெண்கள் தினத்தைக் கொண்டாடின. பல்வேறு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ‘ வரலட்சுமி நோன்பு’ போல, ‘அனைத்டுலாப் பெண்க நாளு’ம் இன்னொரு பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. வலதுசாரி இந்துத்துவமும் தமிழ் தேசியத்திலுள்ள பழமைவாதப் போக்குகளும் கைகோர்த்துக் கொண்டதன் வெளிப்பாடாக,‘பெண்மை’யை சிறப்பித்துக் கூறும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் மூலம் பாரதியின் ‘புதுமைப் பெண்’ணுக்கு எதிரான ‘ பழமைப் பெண்’ நிறுத்தப்பட்டாள். இடதுசாரி இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்க்ங்கள் ஆகியனவற்றில் ஒன்றுகூட இந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடத்தியதாகத் தெரியவில்லை. அன்னபூரணி, நீலாவதி, ஜெயசேகரி,விசாலாட்சி,சிவகாமி,கிரிஜாதேவி என்று எண்ணற்ற பெண் சிந்தனையாளர்கள் இருந்த சுயமரியாதை இயக்க மரபின் வெளிறிய அடையாளங்கள்கூட இன்று இல்லை. பெண்கள் பிரச்சனையை, பெண் விடுதலையைக் குறித்துப் பேசுவதற்காக, அவை தொடர்பான செயல்பாடுகளைத் தீர்மானித்து முன்னெடுத்துச் செல்வதற்காக உலகம் முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட நாளைக் கொண்டாடுவதற்கான முதன்மையான பங்களிப்பைச் செய்த இடதசாரி மரபுக்கு உரிமை கொண்டாடுபவர்களும்கூட மக்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை.
இத்தனைக்கும் இந்திய இடதுசாரி மரபில் எத்தனையோ பெண்கள், பெண் விடுதலை உள்ளிட்ட ஒட்டுமொத்தமான சமூக, அரசியல், பொருளாதார,பண்பாட்டு விடுதலைக்கான சிந்தனைத் தளத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதுடன், வீரப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர்.எடுத்துகாட்டாக,பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆயுதக் கிடங்குகள் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்து ஆயுதங்களைக் கைப்பற்றி வருதல்,தந்திக் கம்பிகளை அறுத்தல்,போலிஸ் தடுப்பு வேலிகளைச் சிதைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் புரட்சிகரப் பெண்கள். சிட்டகாங்கில் ஒரு குன்றின் மீதிருந்த பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் வீட்டைத் தாக்கிவிட்டு ஆயுதக் கிடங்கிலுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக ஆயுதமேந்திய பெண்கள் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற பிரீதிலதா வாடட்டார்,வெடிகுண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்தார்.பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட அவர், சித்திரவதைகளிலிருந்து தப்பிப்பதற்காக சயனைட் மருந்தை உடகொண்டார்.அவருடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கல்பனா,பின்னர் பொதுவுடைமை இயக்கத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டார்.பிரீதிலதா, கல்பனா ஆகியோரின் அளப்பறிய தியாகமும் வீரமும் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டட்திற்குப் பெரும் உள்உந்துதல் தந்தன.பகத் சிங்கும் சந்திரசேகர் ஆஸாத்தும் உருவாக்கிய இந்துஸ்தான் குடியரசு இராணுவத்திலும் ஏராளமான பெண்கள் இருந்தனர்.டெல்லியில்,வெடிகுண்டு தயாரிக்கும் பொறுப்பை பதினேழு வயதான ரூப்வதி ஜெயின் ஏற்றுக் கொண்டார்.ஒருமுறை பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து பகத் சிங்கைக் காப்பாற்றுவதற்காகத் பகத் சிங்கின் மனைவியாக நடித்த துர்கா தேவி என்னும் இளம் பெண் பம்பாய் நகரில் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரியொருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திலும்கூட ஏராளமான பெண்கள் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் காலமான கேப்டன் லட்சுமி சேகாலின் தலைமையிலிருந்த ஒரு படைக்கு (regiment) ஜான்ஸி ராணியின் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் இறுதி நாள்களில் வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்த ‘தேபாகா‘ (விளைச்சலின் மூன்றில் இரு பங்கு உழுது பய்ரிடுபவருக்குத் தரப்பட வேண்டும் என்னும் கோரிக்கை) உழவர் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த இந்துத் தொகுப்பு சட்ட மசோதாவுக்கு (அது இந்துக் குடும்பங்களில் பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது) தேபாகா போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஆதரவு தந்தனர். 1946-51இல் நடந்த வீரத் தெலங்கானாப் புரட்சிப் போராட்டத்திலும் ஏராளமான பெண்கள் பங்கேற்று, முக்கியப் பாத்திரம் வகித்தனர். தெலங்கானாப் போராட்டத்தில், ஆயுதமேந்திய குழுக்களில் பங்கேற்ற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.அதற்குக் காரணம், அந்தப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்,ஆயுதமேந்திய குழுக்களில் அவர்கள் பங்கேற்பது அவர்களுக்கு பெரும் தொல்லைகளைக் கொண்டுவரும் என்று நினைத்ததுதான். இருப்பினும் ஏராளமான பெண்கள் போராட்டத்தின் முன்னணியில் இருந்த்னர்.ஏறத்தாழ நூறு பெண்கள் கொடூரமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர் லச்சம்மா என்னும் புரட்சிகரப் போராளி, ஆடை களையப்பட்டு பிறந்த மேனியாய் மரத்தில் கட்டிவைக்கப்பட்டுக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார்.அப்போதுகூட தலைமறைவாக இருந்த கட்சித் தோழர்கள் பற்றிய சிறு தகவலைக் கூட போலீஸாரால் அவரிடமிருந்து பெற முடியவில்லை.கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் 150 பேர் சிறைக் கொடுமைகளுக்கு எதிராக ரம்பாயம்மா என்னும் புரட்சியாளரின் தலைமையில் சிறைக்குள் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தினர்.மேற்சொன்ன இரு போராட்டங்களிலும் அவர்கள் நிலப்பிரபுக்கள்,போலிஸ் ஆகியோரின் கொடிய ஒடுக்குமுறையை மட்டுமின்றி தந்தைமைச் சமுதாய ஆணாதிக்கத்தையும் எதிர்கொண்டனர்.
தமிழகத்திலும்கூட ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் புரட்சிக் குணம் மிக்க ஏராளமான பெண்கள் இருந்தனர்.மணியம்மா, ஜானகி அம்மா, பாப்பா (உமாநாத்), கோவை ஸ்டேன்ஸ் மில் தொழிலாளி ராஜம்மா எனப் பலர் இருந்தனர். நாடாளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும்கூட போராட்ட குணமிக்க பெண்க:ள் இருந்து வந்துள்ளனர்.கீழ் வெண்மணியில் நடந்த கூலி உயர்வுப் போராட்டம், வாச்சாத்தியில் பழங்குடிப் பெண்கள் அரசாங்க அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பெண்கள் காட்டிய உறுதி பாராட்டத்தக்கதாக இருந்தது.சிபிஎம் கட்சியின் அதிகாரபூரவமான நிலைப்பாடு,மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாறாக நக்சலைட்டுக்ளைப் புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகப் பார்த்த மைதிலி சிவராமன் தொழிற்சங்க முனையிலும், மகளிர் அமைப்பிலும், மனித உரிமைக் களத்திலும் ஆற்றிய செயல்பாடுகள், தமிழக, இந்திய,சர்வதேச அரசியல் நிலைமைகள் பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், சாதியம்,பார்ப்பனியம் பற்றிய ஆவரது ஆய்வுகள் ஆகியனவற்றைப் புறக்கணித்துவிடமுடியாது. கூடங்குளம் அனுமின் நிலையத்தை மூடக் கோரி நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் காட்டிவரும் நெஞ்சுரம் நம்மை வியக்க வைக்கிறது.
1967இல் வசந்தத்தின் இடிமுழக்கம் என வர்ணிக்கப்பட்ட உழவர் போராட்டம் நக்ஸல்பாரியில் எழுந்தபோது,அதிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைமையில் 1960களின் பிற்பகுதியில் ஆந்திரப் பிரதேசத்தின் சிறிகாகுளம் பகுதியில் நடைமெற்ற ஆயுதமேந்திய உழவர் புரட்சியில் பங்கேற்க ஏராளமான அறிவாளிகளும் அறிவுஜீவிகளும் நகர்ப்புறத்தை விட்டு நாட்டுப்புறத்திற்குச் சென்றனர். சிறிகாகுளம் போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர் நாராயணா,மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்;அவரும் பஞ்சடி கிருஷ்ணமூர்த்தியும் கொல்லப்பட்ட பிறகு,பஞ்சாடி நிர்மலா போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். 1969 டிசம்பரில் அவரும் அங்கம்மா,சரஸ்வதி ஆகிய பெண் போராளிகளும் புகழ்பெற்ற ஆந்திரக் கவிஞர் சுப்பாராவ் பாணிகிரகியும் போலிஸார் கைது செய்யப்பட்டு,கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு ‘எனக்வுண்டர்’என்னும் பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1970 வரை நடந்த சிறிகாகுளம் போராட்டத்தில் 17 பெண்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரம் பெண்கள் சிறையில் அடைக்கபப்ட்டனர்;3000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
பல பின்னடைவுகளுக்குப் பிறகு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் மீண்டும் ஆந்திராவிலும், பின்னர் மத்திய இந்தியாவிலும் ‘பீனிக்ஸ்’ பறவை போல உயிர்த்தெழுந்த போதெல்லாம் ஆயிரக்கணக்கான பெண்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்தனர். மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மக்கள் கெரில்லா இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என்று சொல்லப்படுகிறது. ஜார்கண்ட், சட்டிஸ்கர், பீகார், ஒரிஸ்ஸா, மகாராட்டிரம் ஆகிய மா நிலங்களில் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் கொடூரமாக ஒடுக்கப்படுவது மட்டுமல்ல, அந்த ஒடுக்குமுறைகளை அவர்கள் தீரத்துடன் எதிர்கொள்வதும்கூட அன்றாட செய்திகளாகியுள்ளன.வனப் பகுதிகளிலும்கூட ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டெழுந்து ஆண்டு தோறும் ‘அனைத்துலகப் பெண்கள் நாளை’கொண்டாடி வருகின்றனர். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், முதலாளியம், ஆணாதிக்கம், சாதியம், மத அடிபப்டைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் பகுதியாகவே அவர்கள் ‘அனைத்துலகப் பெண்கள் நாள்’ நிகழ்ச்சிகளை அமைக்கின்றனர்.
ஒவ்வோராண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாளை ‘அனைத்துலகப் பெண்கள் நாளாக’ கடைப்பிடிக்க வேண்டும் என்பது 1910ஆம் ஆண்டில் டென்மார்க் தலைநகரமான கோபென்ஹெகனில் தீர்மானிக்கப்பட்டது.அப்போது அங்கு நடைபெற்ற சோசலிச உழைக்கும் பெண்களுக்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில்,பெண்களின் உரிமைக்காக நடத்தப்படும் இயக்கத்தைப் போற்றவும் அனைத்துப் பெண்களும் வாக்குரிமை பெறுவதற்கு உதவவும் உலகின் அனைத்து நாடுகளிலும் மார்ச் மாதம் ஒரு நாள் பெண்கள் தின்மாகக் கொண்டாடப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஜெர்மானியக் கம்யூனிஸ்டும் லெனினின் போராட்டத் தோழருமான கிளாரா ஜெட்கின்.அந்தத் தீர்மானத்தை அவர் கொண்டு வந்ததற்கு உள்உந்துதலாக இருந்தது அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் நடத்திவந்த போராட்டங்களாகும்.அவரது தீர்மானம்,17 நாடுகளிலிருந்து வந்திருந்த 100 பிரதிநிதிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.எனினும் குறிப்பிட்ட எந்த நாளும் ‘அனைத்துலகப் பெண்கள் தினமாக’ நிர்ணயிக்கபபடவில்லை.
மேற்சொன்ன தீர்மானத்தின்படி, முதல் அனைத்துலகப் பெண்கள் தினம் 1911 மார்ச் 19ஆம் நாள் ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி,ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது அந்த நாடுகளில் நடந்த பேரணிகளில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். வாக்குரிமை மட்டுமின்றி வேலை வாய்ப்பு உரிமையும் தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும், தங்களுக்கு விருப்பமான தொழிலைக் கற்கும் உரிமை தரப்பட வேண்டும், வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கைகளையும் அவர்கள் எழுப்பினர். மார்ச் 19 ஆம் நாளை ஜெர்மானியப் பெண்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், 1848ஆம் ஆண்டில் அதே நாளில்தான், வெகுமக்களின் ஆயுதமேந்திய எழுச்சியைக் கண்டஞ்சிய பிரஷ்ய மன்னர், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
1913ஆம் ஆண்டில்தான் மார்ச் 8ஆம் நாள் அனைத்துலகப் பெண்கள் தினம் என்று தீர்மானிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இரு நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து அவற்றைப் போற்றும் வண்ணமாகவே இந்த நாள் தேர்தெடுக்கப்பட்டது.1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள்,ஆலைகளில் நிலவிய மனிதத்தன்மையற்ற வேலை நிலைமைகள், 12 மணி நேர வேலை, மிகக் குறைந்த ஊதியம் ஆகியவற்றை எதித்துப் போராட்டம் நடத்தினர். பேரணியாக வந்த பெண் தொழிலாளர்களை அடித்து உதைத்து அவர்கள் கலைந்து செல்லும்படி நிரிபந்தித்தது போலிஸ். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதே மார்ச் மாதம், 15000 பெண் தொழிலாளர்கள் வேலை நேரத்தைக் குறைக்கும்படியும்,ஊதியத்தை உயர்த்தும்படியும்,வாக்கு¨ரிமையை வழங்கும்படியும்,குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும்படியும் கோரிக்கைகள் எழுப்பிப் பேரணி நடத்தினர். பொருளாதாரரீதியான பாதுகாப்பைக் குறிக்கும் ‘ரொட்டி’, மேம்பட்ட வாழ்க்கை முறையைக் குறிக்கும் ‘ரோஜா’ ஆகியவற்றை இணைத்து ‘ரொட்டியும் ரோஜாவும்’ (Bread and Rose) என்னும் முழக்கத்தை உருவாக்கினர்.அந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையை தேசிய பெண்கள் தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. அமெரிக்காவில் முதல் தேசிய பெண்கள் தினம் 1909 பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்பட்டது.அதைப் பின்பற்றி, ஐரோப்பியப் பெண்களும் பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையைப் பெண்கள் தினமாக அனுசரிக்கத் தொடங்கினர். இந்தப் பின்னணியில்தான் கிளாரா ஜெட்கின் ஒவ்வோராண்டும் ஒரு குறிப்பிட்ட நாளை அனைத்துலகப் பெண்கள் நாளாகக் கொண்டாட வேண்டும் என்னும் தீர்மானத்தை 1910இல் நடந்த கோபென்ஹேகன் மாநாட்டில் கொண்டு வந்திருந்தார். ஆனால், 1911இல் ஐரோப்பிய நாடுகளில் முதல் அனைத்துலகப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்ட மார்ச் 25க்கு ஒரு வாரத்திற்குப் பிறகு அமெரிக்காவில் பின்னலாடைத் தொழிற்சாலையொன்றில் நடந்த தீ விபத்தில் 140க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொடிய நிகழ்ச்சி, அமெரிக்க அரசாங்கத்தை தொழிலாளர் சட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும்படி நிர்பந்தித்ததுடன், அனைத்துலகப் பெண்கள் தினத்தை இன்னும் சிறப்பாகக் கடைப்பிடிக்கும்ப்படியும் தூண்டியது. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகள்தான் ஒவ்வோராண்டும் மார்ச் 8ஆம் நாளை ‘அனைத்துலகப் பெண்கள் நாளாக்’ஆக்கின.
முதல் உலகப் போருக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயத்தம் செய்துகொண்டிருந்த 1913ஆம் ஆண்டில்தான், மார்ச் 8ஆம் நாளன்று ரஷியப் பெண்கள் தங்கள் நாட்டில் முதல் அனைத்துலகப் பெண்கள் தினம் கொண்டாடினர். அடுத்த ஆண்டு, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் மார்ச் 8ஆம் நாளிலும்,அதனை அடுத்து வந்த நாள்களிலும் போருக்கு எதிராகவும்,ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அதன் பிறகு ரஷியாவில் நடந்த ‘அனைத்துலகப் பெண்கள் தின’ நிக்ழ்வுகளில் மிகவும் புகழ்பெற்றது 1917 மார்ச்8 அன்று கம்யூனிஸ்ட் போராளிகளான கிளார ஜெட்கினும் அலெக்ஸாண்ட்ரா கொல்லன்டாயும் இணைந்து, ‘ரொட்டிக்காகவும் ரோஜாவுக்காக’வும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வழிநடத்திய வேலைநிறுத்தப் போராட்டமாகும். அந்த வேலைநிறுத்தப் போராட்டம், மார்ச் 8-12 ஆகிய நாள்களில் அந்த நகரத்தில் வெடித்த பல்வேறு கிளர்ச்சிகளுடன் இணைந்து, ஜார் மன்னன் முடியாட்சியைத் துறந்த பிப்ரவ்ரி புரட்சிக்கு (அன்று ரஷியாவில் இருந்த நாள் காட்டி முறையின்படி அந்த மார்ச் நாள்கள்,பிப்ரவரி நாள்களாகக் கருதப்பட்டன) வழிகோலியது.
சோவியத் யூனியனில் மார்ச் 8ஆம் நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, வீரமிக்க பெண் தொழிலாளர்களைக் கொண்டாடும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.இது உலகெங்கிலுமுள்ள பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1949இல் நிறைவுற்ற சீனப் புரட்சி,உலகில் மிகப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்கக் கருத்துகள் நிறைந்திருந்த ஒரு நாட்டில்கூட புரட்சியில் பெண்கள் பெருமளவில் பங்கேற்க முடியும் என்பதற்கான சிறந்த சான்றாக அமைந்தது.
1960களிலும் 1970களிலும் மேற்கத்திய முதலாளிய நாடுகளில் ஜனநாயக எழுச்சிகளும் மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்களும் தீவிரமடைந்தபோது, பெண் விடுதலை இயக்கங்களும் வலுப்பெற்றன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு பெண்ணிலைவாதச் சிந்தனையாளர்கள் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், தந்தைமைப் பண்பாடு ஆகியன பற்றிய ஆழமான ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். பெண் விடுதலை இயக்கங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்ததால், அவற்றை சமாளிப்பதற்கும்,ஆபத்தில்லாத திசையில் அவற்றைச் செலுத்துவதற்கும் ஏகாதிபத்தியமும் ஆளும் வர்க்கஙக்ளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. சோசலிசக் குறிக்கோள்களை எதிர்க்கும் பெண் இயக்கங்கள் தோண்றத் தொடங்கின. 1977ஆம் ஆண்டு ஐ.நா.அவை, மார்ச் 8ஆம் நாளை ‘சரவதேசப் பெண்கள் தினமாக’அதிகாரபூர்வமாக அறிவித்ததது பெண்கள் இயக்கத்தின் புரட்சிகரக் குறிக்கோளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முக்கிய முயற்சியாக அமைந்தது. பெண்களை வானிபச் சரக்குகளாக்கும் ஊடகங்கள் முதல் இந்துக்களின் தூய்மையையும் மானத்தையும் பாதுகாப்பவர்களாகப் பெண்களைக் கருதும் இந்துத்துவம் வரை, எல்லாமே இன்று ‘அனைத்துலகப் பெண்கள் தினத்தை’ உற்சாகமாகக் கொண்டாடுகின்றன.
எனினும்,அந்த நாளின் புரட்சிகர உள்ளடக்கத்தை,குறிக்கோளை மீட்டெடுக்க இந்தியாவில் எத்தனையோ முற்போக்கு,ஜனநாயக, புரட்சிகரப் பெண்ணிலைவாதிகளும் பெண் புரட்சியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலக முதலாளியத்தின், ஏகாதிபத்தியத்தின்,இந்தியப் பிற்போக்குச் சக்திகளின் நலன் காக்கும் ஊழல் அரசியல்வாதிகள்,ஊடகவியலாளர்கள்,போலி இடதுசாரிகள் முதலியோர் பெற்றுள்ள விளம்பரத்தில் ஒரு சதவீதம்கூடப் பெறாத, இந்திய ஆளும் வர்க்கங்களால் தேச விரோதச் சக்தியாகப் பார்க்கப்பட்ட,‘நவீன நாகரிக நீரோட்டத்தி’ற்குள் வர விருப்பமில்லாதவர்கள் என சுரண்டும் வர்க்கங்களால் கருதப்படுகிற பழங்குடி மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து அவர்களது போராட்ட குணத்தை உள்வாங்கியும்,தனது பங்கிற்கு அவர்களிடம் சர்வதேச உணர்வை வளர்த்தும் வந்த ஒரு அசாதாரணமான பெண் போராளியை, சிந்தனையாளரை இப்போதாவது நினைவுகூர்வது அவசியம்.
1939ஆம் ஆண்டில் ஜப்பானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்ட வடிவத்தில் சீனாவின் புதிய ஜனநாயகப் புரட்சி முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தப் புரட்சியை நடத்தி முடிப்பதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஓர் ஐக்கிய முன்னணி கட்டப்பட்டிருந்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போருக்குப் பெரும் வலுச் சேர்க்கவும் பல்லாயிரககணக்கான உழவர்களை அமைப்புக்குள்ளாக்கவும், புரட்சிகரப் பண்பாட்டு இயக்கத்தை வளர்த்தெடுக்கவும், புரட்சிகர ஐக்கிய முன்னணியை விரிவுபடுத்தவும்,புதிய சீனாவை உருவாக்கவும் பெரும் எண்ணிக்கையிலான அறிவாளிகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வென்றெடுக்க வேண்டும் என அக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.மாவோவால் வரையப்பட்ட அந்தத் தீர்மானம்,(Recruit Large Number of Intellectuals, Selected Works of Mao Tse-tung, Foreign Languages Press, Peking, First edition 1965,Second edition 1967, Vol II, pp 301-303) சீனப் புரட்சிகர இராணுவம், கட்சிக் கிளைகள்,சீனப் பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த பகுதிகளிலிருந்த அரசாங்கத்தின் பல்வேறு உறுப்புகள் முதலியவற்றில் அறிவாளிகளைச் சேர்ப்பதற்குக் காட்டப்படும் தயக்கத்தையும் எதிர்ப்பையும் சுட்டிக் காட்டியது. அரைக் காலனி,அரை- நிலப் பிரபுத்துவ நாடுகளில் உள்ள அறிவாளிகளுக்கும் முதலாளிய நாடுகளில் உள்ள அறிவாளிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும்; நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் சேவை புரியும் அறிவாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் சேவை புரியும் அறிவாளிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும்; அறிவாளிகளை வென்றெடுப்பதற்காக சீன முதலாளி வர்க்கமும் ஜப்பானிய ஏகாதிபத்தியமும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த சூழலையும் கருத்தில் கொண்டு கட்சி, இராணுவம், அரசாங்க உறுப்புகள், பண்பாட்டு அமைப்புகள், வெகுமக்கள் அமைப்புகள் ஆகிய அனைத்திலும் பெரும் எண்ணிக்கையிலான அறிவாளிகளைச் சேர்க்க வேண்டும் என்று மாவோ கூறினார். மாவோவால் வரையப்பட்ட அந்த தீர்மானத்திலுள்ள வேறு முக்கிய கருத்துகள்: கட்சி நிர்ணயிக்கும் தகுதியின் அடிப்படையிலேயே அறிவாளிகளைச்சேர்க்க வேண்டும்; அந்தத் தகுதியை எட்டாத அல்லது கட்சியில் சேர விரும்பாத அறிவாளிகளுடன் இணைந்து வேலை செய்வதற்கான உறவுகளை வளர்க்கவும் கட்சியுடன் சேர்ந்து பணிபுரிய அவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டும்; அறிவாளிகளைச் சேர்க்கையில் எதிரியின் கையாள்கள், பூர்ஷ்வாக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கட்சிக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் ஆகியோரைப் பற்றி எச்சரிககையுடன் இருக்க வேண்டும்; கட்சி, இராணுவம், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுள் ஏற்கனவே நுழைந்துவிட்டவர்களைக் திட்டவட்டமான சான்றுகளின் அடிப்படையிலேயே களையெடுக்க வேண்டும்;உண்மையிலேயே விசுவாசமான அறிவாளிகளை சந்தேகிக்கக் கூடாது; குற்ற்மற்றவர்கள் மீது எதிர்புரட்சியாளர்கள் சுமத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்..
நியாயமான அளவுக்கு விசுவாசமாகவும் பயனுள்ளவர்களாகவும் இருக்கிற அறிவாளிகள் அனைவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான வேலைகளைத் தந்து, அவர்கள் நாளடைவில் தங்கள் பலகீனங்களைக் கடந்து, தமது உலகக் கண்னோட்டத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைத்து, வெகுமக்களுடன் தங்களை அடையாளப்படுத்தி, பழைய கட்சி உறுப்பினர்கள்,ஊழியர்கள்,கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள்,உழவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து கொள்ள அவர்களுக்கு அரசியல் கல்வியையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்; கட்சியில் உள்ள தொழிலாளர், உழவர் வர்க்கங்களைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் தங்கள் பண்பாட்டு அளவை உயர்த்திக் கொள்ளக் கடுமையாக உழைக்க வேண்டும்; தொழிலாளர்களும் உழவர்களும் அறிவாளிகளாகவும்,அறிவாளிகள் தொழிலார்கள்,உழவர்களாகவும் ஆக வேண்டும். ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவாளிகளைச் சேர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அதேவேளை, கட்சிக்கு ஆதரவாக உள்ள கட்சி-சாராத அறிவாளிகளுடன் கட்சி பொருத்தமான தொடர்புகளை வைத்துக் கொண்டு, ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் ஜனநாயகத்துக்காகவும் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்திலும், பண்பாட்டு இயக்கத்திலும், ஐக்கிய முன்னணி கட்டும் பணியிலும் அவர்களை ஒழுங்கமைக்க வேண்டும்.
1939இல் மாவோ கூறியவை,புதிய ஜனநாயகப் புரட்சிக் காலகட்ட இந்தியச் சூழலுக்கும் பொருந்தும். எனினும், புரட்சிக்கு முந்திய, அதிலும் குறிப்பாக சென்ற நூன்றாண்டின் முன்பாதியில் இருந்த சீன, இந்திய, உலக நிலைமைகளிலிருந்து இன்றைய நிலைமைகள் பல வகைகளில் முற்றிலும் வேறுபட்டுள்ளன: உலகில் முதல் சோசலிசப் புரட்சி நடந்த ரஷியாவில் (சோவியத் யூனியனின்) ஏற்பட்ட மாற்றங்கள், அதன் தகர்வு; மாவோவின் மறைவுக்குப் பின் சீனாவில் ஏற்பட்ட முதலாளிய மீட்பு; ‘நவ-தாராளவாதம்’என்னும் பெயரில் முதலாளிய உற்பத்தி முறையிலும் பகிர்மான முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; முன்பு எப்போதும் இருந்திராத வகையில் ஏகாதிபத்திய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஒன்றிப்பு; நிதி மூலதனத்தின் ஆதிக்கம்; ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறை சாதனங்கள் அதிநவீனமயமாக்கப்பட்டமை;பூர்ஷவா நாடாளுமறே ஜனநாயக முறை உருவாக்கியுள்ள மாயைக;உலக அளவிலும் இந்தியாவிலும் புரட்சிகரச் சக்திகள் பிள்வுபட்டிருக்கும் நிலை; மத அடிப்படைவாதத்தின் எழுச்சி;சாதிய அரசியலின் வளர்ச்சி;ஒட்டுமொத்தமான சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் சாத்தியமில்லை என்னும் அவநம்பிக்கை ஊட்டும் பின்நவீனத்துவக் கருத்துகளின் பரவல்; தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிமையும்; இன்னும் பிற.
இந்த எதிர்மறைக் கூறுகள் நிறைந்த இன்றைய இந்தியச் சூழலில்தான் ‘பசுமை வேட்டை’யின் குறியிலக்காக உள்ள ஆயுதமேந்திய உழைக்கும் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் மத்திய,மாநில அரசாங்கங்களின் கொடிய அடக்குமுறைகளை மட்டுமின்றி ஊடகங்களின் துணையுடன் நடத்தப்பட்டுவரும் அவதூறுகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்கிறார்கள்.பொருளாதாரச் சுரண்டல்,சாதிய, பண்பாட்டுரீதியான ஒடுக்குமுறை, ஆணாத்திக்கம் ஆகியவற்றைத் தங்கள் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே தெரிந்து கொள்கின்ற அந்த உழைக்கும் மக்கள், பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படை ஆதாரமாக உள்ள ஏகாதிபத்திய-முதலாளிய, நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பைப் பற்றிய கோட்பாட்டுரீதியான புரிதலை வளர்த்து கொள்ளவும், பண்பாட்டு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் உதவுவதற்காக அவர்களோடு இணைந்து பணியாற்றும் அதேவேளை, தங்களது உலகக் கண்ணோட்டத்தையும் புரட்சிகரமாக மாற்றியமைத்து, மானுட குலத்தின் பொருள்வகை, ஆன்ம வகைச் செல்வங்களின் ஊற்றுக் கண்ணாக உள்ள உடல் உழைப்பை நல்கும் உழைக்கும் மக்களின் பகுதியாகத் தங்களை ஆக்கிக் கொள்ள எண்ணற்ற அறிவாளிகள் முன் வந்திருக்கிறார்கள்; முன் வருகிறார்கள். அத்தகையவர்களில் மிக அசாதராணமானவராக விளங்கியவர் அனுராதா காந்தி (தோழர் அனு).
1954 மார்ச் 28இல் குஜராத்தித் தாயாருக்கும் கன்னடத் தந்தைக்கும் முதல் குழந்தையாகப் பிறந்த அனுராதா ஷண்பக்,1970களின் தொடக்கத்தில் மும்பையிலுள்ள எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் படிக்கும்போதே, தனது குடும்பச் சூழலில் பெற்றிருந்த கம்யூனிசப் பார்வையைத் தன்னைச் சுற்றியுள்ள உலகத்திற்குப் பொருத்திப் பார்க்கத் தொடங்கினார். முற்போக்கு மாண்வர் சங்கத்தில் தீவிரப் பங்கேற்ற அவர் எம்.ஏ. பட்டமும், சமூகவியலில் எம்.ஃபில். பட்டமும் பெற்ற பின், திறமை மிக்கக் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த காலத்தில் கம்யூனிஸ்ட் இளைஞர் கோபாட் காந்தியைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.(கோபாட் காந்தி,இந்திரா காந்தியின் கணவர் ஃபிரோஸ் காந்தியைப் (Firoz Ghandy)போல்வே பார்ஸி வகுப்பைச் சேர்ந்தவர். மாவோயிஸ இயக்கத்தின் முன்னணித் தலைவர்களிலொருவர் எனக் கருத்தப்படும் கோபாட் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைக் காலக் கொடுமைகள் நாடெங்கெலும் குடிமை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் தேவை¨யை உணர்த்தியபோது, மும்பையில் முற்போக்கு அறிவாளிகளுடன் இணைந்து சிபிடிஆர் (Committee for the Protection of Democratic Rights) என்னும் ஜனநாயக உரிமை அமைப்பை நிறுவியதில் முக்கியப் பாத்திரம் வகித்தார் அனு.
மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் கருநிலையில் இருந்த புரட்சிகர இயக்கத்தின் அறைகூவலை ஏற்று புரட்சிகரக் கருத்துகளைப் பரப்புவதற்காக 1982இல் நாக்பூரில் குடியேறினார்.நாக்பூர் பலக்லைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த போது, தொழிற்சங்க இயக்கத்திலும் தலித் இயக்கங்களிலும் முன்னணிப் பாத்திரம் வகித்தார். வீட்டு வேலை செய்யும் பெண்களை அமைப்புக்குள்ளாக்கி அவர்களது உரிமைக்காகப் போராடச் செய்தார்.கப்பர்கேடா என்னுமிடத்திலுள்ள அனல்மின் நிலையத்தில் வேலை செய்து வந்த 5000 தொழிலாளிகளை அமைப்புக்குள்ளாக்கி,கட்டுமான நிறுவனங்களுக்கும் அவர்களுக்குத் துனை நின்ற போலிஸ் துறைக்கும் எதிரான போர்க்குணமிக்க போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.அவரது புரட்சிகர நடவடிக்கைகளின் காரணமாகப் பல முறை சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1983இல் தோழர் அனு, சந்திராபூர் மாவாட்டத்துக்குக் குடியேறி அங்கு நிலக்கரிச் சுரங்கத் தொழிலளர்களையும் கட்டுமானத் தொழிலாளர்களையும் அமைப்புக்குட்படுத்துவதில் தனது ஆற்றலைச் செலவிட்டார்.மரபான தொழிற்சங்கங்களால் புறக்க்கணிக்கப்பட்ட அமைப்பு-சாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியிலுள்ள முற்போக்குத் தொழிற்சங்க அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். நாக்பூர் பலகலைக் கழகத்தில் பணியாற்றி வந்த போது, தலித்துகள் பெரும்பான்மையாக உள்ளதும், தலித் தலைவர்களின் செல்வாக்குக்கு உட்பட்டதுமான இந்தோரா என்னுமிடத்தில் வசித்து வந்த அவர், அம்பேத்கரின் படைப்புகளை மார்க்ஸிய வெளிச்சத்தில் ஆழந்து கற்றார். எண்ணற்ற தலித் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தலித் இயக்கத்தின் மாவோயிஸ முகமாக விளங்கினார்.ஜோதிபா ஃபுலே,டாக்டர் அம்பேத்கர் ஆகிய சாதி ஒழிப்புப் போராளிகள் பிறந்த மகாராஷ்ட்டிரத்தில் சாதியம்,தீண்டாமைக் கொடுமை,தலித்துகள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை மார்க்ஸியக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, சாதி ஒழிப்புப் போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சியோடு இணைத்துப் பார்ப்பதற்கான தத்துவ அடிப்படைக்கான மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
1990களின் இறுதியில் புரட்சிகர இயக்கத்தின் அழைப்பின் பேரில் சட்டிஸ்கார் மாநிலத்திலுள்ள பஸ்தார் பகுதிக்குச் சென்று மூன்றாண்டுகள் பழங்குடி மக்களுடன் வாழ்ந்து வந்தார். தண்டகாரண்யா பகுதியிலுள்ள கோண்டுகள் என்னும் பழங்குடி மக்கள், தங்கள் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் பொருட்டு அந்தப் பழங்குடி மக்கள் குறித்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள அனைத்தையும் ஆழ்ந்து கற்றறிந்தார்.தனது வாழக்கையில் மிகுந்த நிறைவு தந்ததாக அவர் கருத்திய அந்த மூன்றாண்டுக் காலத்தில் கோண்டு பழங்குடி மக்களின் வாழ்க்கையை, அவர்களது போராட்டம் மிகக் கடினமான சூழ்நிலையில் கட்டியமைக்கபப்ட்ட விதத்தை, குறிப்பாகப் பெண்களின் அனுபவத்தை,அவர்களது புரட்சிகர அமைப்பை, கெரில்லாக் குழுக்களில் இருந்த பெண் போராளிகளை மிகக் கூர்மையாகக் கற்றறிந்தார்.
1997இல் பஸ்தார் பகுதியைக் கொடுமையான பஞசம் கவ்விய போது, பழங்குடி மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்ததை நேரில் கண்ட அவர், உணவுப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றி அந்த ஏழை மக்களுக்குப் புரட்சிகர இயக்கத்தின் கெரில்லாக் குழுக்கள் விநியோகித்த போது அவர்களோடு தோளோடு தோள் நின்று நிவாரணப் பணியாற்றுகையில் பல முறை மலேரியா நோயால் அவதிப்பட்டார். தனக்கு எந்த முக்கியத்துவம் தராத அவர் முகத்தில் புன்னகை தவழாத தருணங்கள் ஏதும் இருந்ததில்லை என அவரது போராட்டத் தோழர்களும் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒடுக்கப்பட்ட மக்களும் எப்போதும் கூறுவர்.
பஸ்தார் பகுதியைச் சுற்றி வளைத்து புரட்சி இயக்கத்தை நசுக்குவதற்கு அரசு ஒடுக்குமுறை இயந்திரம் தனது புற இராணுவப் படைகளை அனுப்பிய போது, கடுகளவுகூட பயம் இல்லாமல் புரட்சிகரச் சக்திகளுடன் இனைந்து வேலை செய்து வந்தார். புரட்சியாளருக்கும் புற இராணுவப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையொன்றின் போது, மயிரிழையில் உயிர் தப்பினார். இருபதாம் நூற்றாண்டு இந்தியக் கிராமப்புறத்தில் வெகுமக்களோடு இருப்பதன் பொருள், அவர்களைப் போலவே எந்த நேரமும் அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுதான் என்று அவர் கூறுவார்.
பஸ்தாரில் அவர் இருந்த பைரங்காத் பகுதிதான், சல்வா ஜுடும் என்னும் கூலிப் பட்டாளத்தின் கொடூரமான தக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த பகுதியாகும். அங்கும் அவரை பல முறை மலேரியா நோய் தாக்கியது. பழங்குடிப் பெண்களின் கனிவு நிறைந்த கவனிப்பு அவரைப் பாதுகாத்து வைத்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் பழங்குடி மக்களுக்கு மார்க்ஸிய வகுப்புகள் நடத்தி வந்தார். பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, புதிய ஜனநாயகப் புரட்சி ஆகியன பற்றிய வகுப்புகளே அவை. அவர்களுக்கு- குறிப்பாகப் புரட்சிகர இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பழங்குடிப் பெண்களுக்கு – பொது அறிவையும் மார்க்ஸிய அரிச்சுவடியையும் கற்றுத் தந்தார். அந்தப் பகுதிப் புரட்சிகர இயக்கத்துக்காக ஏராளமான துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள ஆகியவற்றையும் எழுதி வந்தார்.
மகாராஷடிராவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் குழுவின் நிறுவன உறுப்பினராக இருந்த அவர், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக 9ஆவது பேராயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.புரட்சிகர இயக்கம் மேற்கு பஸ்தார் பகுதிக்கான பொறுப்பை அவருக்குத் தந்திருந்த காலகட்டத்தில் புரட்சி இயக்கத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.பெண்கள் அன்றாடம் எதிரகொள்ளும் ஆணாதிக்க,தந்தைமை ஆதிக்கத்தின் பல்வேறு வடிவங்கள் மீது தனது கவனத்தைச் செலுத்தினார். அப்போதுதான், அவரது உடலின் உள் உறுப்புகளை பலகீனமாக்கிய நோயுடன் உயிர்க்கொல்லியான மலேரியாவும் சேர்ந்து அவரது வாழ்க்கைக்கு முடிவு கட்டியது. அவரைப் பாதுகாத்து இந்திய மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவரது பங்களிப்புத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பிய தோழர்கள் அரசின் கொடூரமான கண்காணிப்பையும் பொருட்படுத்தாமல், மருத்துவ மனையொன்றில் அவரைச் சேர்த்தனர்.கடும் வேதனைக்கிடையிலும் புன்னகை மாறாதிருந்த தோழர் அனுவின் முகத்தை 2008 ஏப்ரல் 12 அன்று மரணம் கவ்வியது.
புரட்சிகர அறிவாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எத்தகைய இயங்கியல்ரீதியான உறவு இருக்க வேண்டும் என்று மாவோ கூறினாரோ -உழைக்கும் மக்கள் அறிவாளிகாகவும் அறிவாளிகள் உழைக்கும் மக்களாகவும் மாற வேண்டும்- அதற்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்தவர் தோழர் அனு.,ரோஸா லுக்ஸம்பர்க்,கிளாரா ஜெட்கின்,அலெக்ஸாண்ட்ரா கொல்லண்டாய் என புரட்சிகரமான பெண் சிந்தனையாளர்களையும் தலைவர்களையும் மாகூkசீயம் உருவாக்கியிருக்கிறது.தத்துவம்,நடைமுறை ஆகிய இரணடையும் இணைத்த அந்தப் புரட்சிகரப் பெண் போராளிகளின் மரபுக்கு உரியவர் தோழர் அனு.
தோழர் அனுவை ஓரிரு முறை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். முதல் சந்திப்பு 1981இல். தமிழநாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடத்தி வந்த 1980களில் ‘மோதல்கள்’ என்னும் பெயரால் ஏராளமான கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் போலிசாரால் சட்டவிரோதமாக சுட்டுக் கொல்லப்படுவதும், நக்சலைட் ஆதரவாளர்கள் என்னும் பெயரால் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுவதும், ஏராளமான மனித உரிமை ஆர்வலர்களும் அறிவாளிகளும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதும், இவற்றை ஊடகங்கள் கண்டும் காணாதது போல் இருந்ததுமான ஒரு சூழலில், தமிழகத்தில் நடைபெற்று வந்த ஒடுக்குமுறைக்ளை வெளி உலகுக்குத் தெரிவிக்கவும், சட்டரீதீயான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்திந்திய அளவிலான ஓர் உண்மை அறியும் குழுவை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பம்பாய்க்கும் டெல்லிக்கும் அனுப்பப்ப்ட்டிருந்தேன்.‘பிரக்ஞை’சிற்றேட்டுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பம்பாய் நண்பர் ரவி ஜி என்பார் தோழர் அனுவின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்.சிபிடிஆர் அமைப்பில் முக்கியப் பங்கேற்றிருக்கும் மனித உரிமைப் போராளிகள் என்னும் அளவில்தான் அனுவும் கோபாடும் எனக்கு அப்போது அறிமுகமானார்கள். புகழ்பெற்ற நாடகாசிரியரும் இயக்குநருமான விஜய் டெண்டுல்கர்தான் அப்போது சிபிடிஆர் அமைப்பின் தலைவராக இருந்தார்.மாதவ் சாத்தெ என்னும் லோகியா சோசலிஸ்ட் அந்த அமைப்பின் செய்லாளர்.அவர் ‘அவசாரநிலைக் காலத்தில்’ பத்தொன்பது மாதங்கள் சிறையில் அடைக்க்ப்பட்டிருந்தார்.தோழர் அனுவின் வீட்டிற்கு (அது ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே இருந்த சிறிய ஃப்ளாட்) சென்ற போது, கோபாட் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். ‘தால்’என்று அவர் கூறிய, உப்பும் காரமும் குறைவாக உள்ள பருப்புப் குழம்பும் சோறும் பரிமாறப்பட்டன. பின்னர் அவர்களது அறிவுரையின் பேரில் அப்போது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வில் பணியாற்றி வந்தவரும் தற்போது ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’யின் இணையாசிரியராகவும் உள்ள பெர்னார்ட் டி மெல்லொ, மனித உரிமைகளில் அக்கறை கொண்டிருந்த மற்றொரு முக்கிய பத்திரிகையாளர் ஓல்கா டெல்லிஸ், மற்றொரு மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த ரஜ்னி எக்ஸ் தேசாய் முதலியோரைச் சந்தித்துப் பின்னர் டெல்லி புறப்பட்டுச் சென்றேன். தம்ழ் நாட்டுக்கு வருகை தந்த ‘உண்மை அறியும் குழு’வில் அன்று இந்தியாவின் மிக முக்கிய பத்திரிகையாளர்களாக இருந்த மோகன்ராம் (மோகன்ராம் கம்யூனிஸ்ட் அனுதாபி; நாகி ரெட்டி போன்ற தெலங்கானா போராளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்),கிளாட் ஆல்வாரிஸ் ஆகியோரும் இருந்தனர். அந்த உண்மை அறியும் குழுவில் அனு இடம் பெறவில்லை. சிபிடிஆரைச் சேர்ந்த சேர்ந்த நீலம் ரஹேஜா, ஜோதி புன்வானி, டெல்லியையும் சேர்ந்த பேராசிரியர் சுதேஷ் வைத் ஆகிய மூன்று பெண்கள் அந்தக் குழுவில் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார் அனு.1984வரை மீண்டும் ஒரு முறைதான் அனுவைச் சந்தித்திருக்கிறேன். எனது வாழ்க்கையிலும் எத்தனையோ மாற்றங்கள்;சோதனைகள்.1980களில் அவரும் கோபாடும் நாக்பூருக்குச் சென்றுவிட்டது எனக்குத் தெரியும்.ஆனால் அவர்கள் இருவரும் மார்க்ஸிஸ்ட் -லெனினிஸ்ட் இயக்கத்தின் தீவிர செயல்பாட்டாளர்கள் என்பதைப் பின்னர் நண்பர்கள் சொல்லியபோது என்னால் நம்பவே முடியவில்லை.அத்தனை அடக்கமானவர்கள் இருவரும். எந்தத் தியாகத்திற்கும் சோதனைக்கும் அஞ்சாத அவர்கள், மாற்றுக் கருத்துடையவர்களை – அந்தக் கருத்துகள் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை புரியாதபட்சத்தில்- மதிக்கக்கூடியவர்கள்; தர்க்கரீதியான விவாதத்தின் மூலம் தங்கள் நிலைப்பாட்டுக்கு அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்; சகட்டு மேனிக்கு வார்த்தைகளை அள்ளி வீசாதவர்கள் – அவர்களைப் பற்றி எனக்கு ஏற்பட்ட மனப் பதிவுகள் இவை.
இந்த மனப்பதிவுகளை உறுதிப்படுத்துவனவாக உள்ள தோழர் அனுவின் கட்டுரைகளின் தொகுப்பு. டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அவர்களால் டெல்லியில் வெளியிடப்பட்டது. சாதி ஒழிப்பு,பெண் விடுத்லை ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்டுரைகள் இந்த நூலின் பெரும் பகுதியாக அமைந்துள்ளன.தலித் விடுதலை, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியன குறித்து அம்பேத்கர், பெரியார், ஃபுலெ, மேற்கு நாட்டுப் பெண்ணிலைவாதிகள் ஆகியோர் கூறிய கருத்துகளை செரித்து,அவற்றிலுள்ள ஆக்கபூர்வமான கூறுகளை உட்செரித்து,மார்க்ஸியத் தத்துவத்தின் மூலம் அவற்றைக் கடந்து உயர்ந்த தளத்துக்குச் செல்ல உதவும் தத்துவக் கட்டுரைகள்; களப் போராளியாக இருந்தபோது வாழ்ந்துபெற்ற அனுபவங்களைப் பதிவு செய்யும் வரலாற்றுக் கட்டுரைகள்;மாவோயிஸ்ட் இயக்கத்தின் மீது உறுதியான பற்றை வெளிப்படுத்தும் எழுத்துகள் – எப்போதும் சிறிது நாணம் கலந்த புன்முறுவல் பூக்கும், மென்மையான, சிறிய உடல்வாகு கொண்ட ஒரு பெண், உலகிலுள்ள மிக வலுவான அரசு யந்திரமொன்றுக்கான அச்சுறுத்தலாக இருந்திருக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் எழுத்துகள்.
மும்பையில் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அருந்ததி ராய்,தோழர் அனுவை ஒரு ‘ரொமாண்டிக் கம்யூனிஸ்ட்’ என்று வர்ணித்திருக்கிறார். உண்மையில் மார்க்ஸிலிருந்து மாவோ வரை, லெனினிலிருந்து செ வரை, ரோஸாவிலிருந்து அனு வரை உண்மையான எல்லாக் கம்யூனிஸ்டுகளுமே ‘ரொமாண்டிக்குக்ள்’தான்; ஓர் இலட்சிய உலகு பற்றிய கனவை, தரிசனத்தைக் காண்பவர்கள்தான்; இந்தக் கனவுகள் இல்லாமல் அவர்கள் புரட்சியாளர்களாக இருந்திருக்க முடியாது.
(S. V. Rajadurai (pseudonym for K. Manoharan) is a well-known Tamil writer and translator who has long been involved with progressive movements. He has written many books in Tamil and English some of them jointly with V.Geetha. His study of Periyar and the movement is probably the deepest. One of their most notable books is “Towards a non-Brahmin Millennium”. They have written detailed accounts on Periyar’s ideology, non-Brahmin movement and opportunism of political parties.)

